போலீஸ் காவலில் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உலோக சிலைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2025 11:11
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3உலோக சிலைகளை வருவாய்த்துறையினரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பெற மறுத்து விட்டதால் போலீஸ் பண்டகசாலையில் வைத்து பாதுகாக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சக்திகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் சிலர் குளிக்கும் போது மூன்று உலோக சிலைகள் கிடைத்தன. ஒரு அடி உயரம் உள்ள விஷ்ணு துர்க்கை சிலை. 1/2 அடி உயரமுள்ள காயத்ரி தேவி சிலை. 1/2 அடி உயரமுள்ள ஆண்டாள் சிலை ஆகிய மூன்று சிலைகள் கிடைத்தன. இவற்றை சேரன்மகாதேவி போலீசார் மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க முயற்சித்தனர். வருவாய்த் துறையினரோ பூமியில் தோண்டும் போது கிடைத்தால் தான் நாங்கள் பொறுப்பேற்க முடியும் ஆற்றில் வீசப்பட்டுள்ளதால் அவை திருட்டு சிலைகளாக இருக்கலாம் என வாங்க மறுத்தனர். சிலைகள் ஐம்பொன் சிலைகள் அல்ல. செம்பு அல்லது பித்தளையில் உருவானவையாக இருக்கலாம் அவற்றில் சேதம் இருப்பதால் கோயில் வழிபாட்டில் இருந்து வீசி இருக்கலாம் எனவே இதுகுறித்து ஹிந்து அறநிலையத் துறையினர்தான் விசாரிக்க வேண்டும் என சிலைகளை வாங்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் மறுத்துவிட்டனர். எனவே உலோக சிலைகள் தற்போது சேரன்மகாதேவி போலீஸ் ஸ்டேஷன் பண்டக சாலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.