மாதேஸ்வரன் மலையில் ரூ.62.50 லட்சத்தில் புதிய கோவில் கட்டும் பணி
பதிவு செய்த நாள்
05
நவ 2025 11:11
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலையில், 62.50 லட்சம் ரூபாய் செலவில், மாதேஸ்வரர் சுவாமிக்கு புதிய கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், குட்டையூர் அருகே மாதேஸ்வரன் மலை உள்ளது. இந்த மலை மீது ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, பலநூறு ஆண்டுகளுக்கு மேலான மாதேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீப விழாவும், தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று விழாவும் நடைபெறும். மிகவும் பழமையான கோவில் என்பதால் சிதிலமடைந்து இருந்தது. கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்ட, அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து, புதிதாக கோவில் கட்ட தமிழக அரசு, 62.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது கோவில் கட்டுமானப்பணிகள் துவங்கி உள்ளன. இதுகுறித்து மாதேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பையன் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதியின் பேரில் பழைய கோவிலை இடித்துவிட்டு, புதிதாக கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கற்பகிரகம், அர்த்தமண்டபம் ஆகிய கல் மண்டபம் கட்டுவதற்கு, ராசிபுரத்தில் இருந்து, தேவையான கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காரைக்குடியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள், கல்லில் சிற்பங்களை செதுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிற்பக் கற்களை கொண்டு செல்வதற்கு, மலை மீது பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதைகள் அமைக்கவும், நடந்து செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கவும், நன்கொடையாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் கூறினார்.
|