பெ.நா.பாளையம்: ‘நாட்டில் நன்மை பெருக வேண்டும், தீமை ஒழிய வேண்டும்’ என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பராயன் கோவிலில், 10,008 பெண்கள் பங்கேற்ற சிறப்பு திருவிளக்கு பூஜையை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகையில், ‘‘நாம் பிரார்த்தனை செய்வதன் நோக்கம் நாம் மட்டும்நலமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்த சமூகமும் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான். நாட்டில் பெண்கள் நடு இரவில் நடந்து சென்றாலும், அவர்களுக்கு எவ்விததுன்பமும் நேராமல் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனையின் நோக்கமாக இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வகையான செல்வங்களும், ஆரோக்கியமும் பரிபூரணமாக பெற்று வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். நாட்டில் நன்மை பெருகி, தீமை ஒழிய வேண்டும் என, இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’’ என்றார். முன்னதாக, எல்லை கருப்பராயன், கோவில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், சித்தர் கோவில்களில் வழிபாடு நடத்தி ஆராதனை செய்தார். சித்தர் கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் பிரசாதம் வழங்கினர்.