மைசூருவிலிருந்து 150கி.மீ., தூரத்திலுள்ள பேளூர் சென்னகேசவர் கோயிலை மன்னர் பிட்டிதேவராயர் கட்டினார். சமணத்தில் இருந்து வைணவத்திற்கு மாறிய இந்த மன்னர், தன் பெயரை விஷ்ணுவர்த்தன் என்று மாற்றிக் கொண்டார். இவருடைய மனைவி சாந்தளாதேவி. இசை, நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவள். ராணியின் கலாரசனைக்கேற்ப இக்கோயிலில் இசை, நாட்டியக் கலையை வெளிப்படுத்தும் பெண் சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. நடனமங்கைகள் தலை பின்னுவதும், கண்ணாடியைப் பார்த்து ஒப்பனை செய்வதும், வாத்தியம் இகை நடனமாடுவதும், கைகளால் அபிநயம் காட்டுவதுமாக காண்போர் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. கருவறையின் முன் உள்ள நவரங்கமண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் தர்பனசுந்தரி என்னும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் சிற்பம் மிகவும் புகழ்பெற்றது.