பதிவு செய்த நாள்
29
மார்
2013
02:03
இதுவரை நமது பெருமைமிகு காஞ்சி சங்கராச்சாரியார்களின் பரம்பரையில் எழுபது பீடாதிபதிகள் அருளாட்சி புரிந்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அறுபத்தி எட்டாவது பீடாதிபதியான ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை மகாப் பெரியவா என்று அழைக்கிறோம், நடமாடும் தெய்வமாகவே வாழ்ந்த அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதும் அவரை தரிசித்து ஆனந்தப்பட்டோம். அறுபத்தி ஐந்தாவது பீடாதிபதியான ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் மகா பெரியவாவின் பரமோஷ்டி குரு இவரும் மாபெரும் மகானாக வாழ்ந்தவர். மத்யார்ஜுன சேத்திரம் என அழைக்கப்படும் திருவிடைமருதூர் என்ற ஸ்தலத்தில் இவர் அவதரித்தார்.
தஞ்சாவூரை ஆண்டு வந்த மகாராஷ்டிர மன்னர் சரபோஜி மகாராஜா பரம்பரையினருக்கு இப்பெரியவர்களின் முன்னோர்கள் குரு ஸ்தானமாக இருந்தார்களாம். இவர்கள் கர்நாடக ஹோஸினி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கன்னட மொழியைத் தாய் பாஷையாக கொண்டவர்கள் என்றும் ஹரிதஸ கோத்திரத்தில் தோன்றி ரிக் வேதத்தைக் கடைப்பிடித்து ஆச்வலாயன ஸுத்ரத்தைப் பின்பற்றியவர்கள் பூர்வாசிரமத்தில் மகாலிங்கம் என அழைக்கப்பட்ட இவர் பிற்காலத்தில் மகா புருஷனாக விளங்குவார் என்பதற்கான பல அறிகுறிகளையும் பெற்றிருந்தார். கம்பீரமான உடலமைப்பு. சரீர காந்தி, கண்களில் ஒளி, சுறுசுறுப்பு, தேஜஸ்ஸுடன் விளங்கினார். சிறு பிராயத்திலிருந்தே, இவரின் புத்தி நுட்பத்தையும், ஆர்வத்தையும், ஆசாரத்தையும் கவனித்த அறுபத்தி நான்காவது பீடாதிபதியான ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றோர்களின் அனுமதியின் பேரில் மடத்தின் வித்வத் கோஷ்டியில் மகாலிங்க சாஸ்திரிகளைச் சேர்ந்தவர். குறுகிய காலத்திலேயே பாஷ்யங்களைப் பயின்று, நல்ல பாண்டித்தையும் பெற்று பூஜைகள், விரதங்கள், ஹோமங்கள் போன்றவைகளை முன்னின்று திறமையாய் நடத்தும் யோகம் பெற்றிருந்தார். தனக்குப் பிறகு பட்டத்துக்குத் தகுதியானவர் மகாலிங்க சாஸ்திரிகள்தான் எனத் தீர்மானித்த பெரியவா, அவருடைய பெற்றோர்கள் சம்மதத்தைப் பெற்று ஒரு நன்னாளில் சன்யாஸ ஆசிரமத்தையும் கொடுத்து காமகோடி பீட சம்பிரதாயப்படி நான்கு மகாவாக் கியங்களையும் உபதேசித்து பூஜா போதித்து மஹா தேவேந்திர சரஸ்வதி என்ற சன்யாஸ நாமாவையும் சூட்டியருளினார்கள். மடத்தை நிர்வகித்து வந்த சுவாமிகள் பக்தர்கள் பிரார்த்தித்துக் கொண்டதின் பேரில் நாட்டின் பல பாகங்களுக்கும் யாத்திரையாகச் சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார்கள்.
அன்னதானம் செய்வதிலும், வேத பாட சாலைகளை நிறுவி வேதம் தழைக்க மாணவர்களை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தினார்கள். பாரத தேசத்தின் பல பாகங்களிலும் விஜயம் செய்து அருள்பாலித்த சுவாமிகள் இளையாற்றங்குடி என்னும் சேத்திரத்திற்கும் வந்தார். அவரால் இத்தலம் பூலோக கைலாசமாக விளங்கியது. இவருக்கு முன் காமகோடி பீடத்தில் பிரகாசித்து வந்த அறுபத்தி நான்கு ஆச்சார்யர்களையும் குறித்த குருபரம்பரா ஸ்தோத்திரத்தை இங்கு இயற்றினார்கள். விரோதி வருஷம் பங்குனி மாதம் எட்டாம் தேதி அமாவாசை (தர்ச தினம்) (20.3.1890) குரு வாரம் கைலாச நாதனுடைய ஸாக்ஷõத் சன்னதியில் அகண்டாகார பிரம்மசைதன்யன் ஆனார்கள். சுவாமிகள் கடைசி காலத்தில் இளைப்பாற வந்ததால் இளையாற்றங்குடி புகழ் பெற்ற தலமாயிற்று! ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாஸ்யை நாளில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மிகச் சிறப்பாக இளையாற்றங்குடியில் நடைபெறுகிறது. நகரத்தார்களால் ஓர் ஆலயம் கட்டப்பட்டு அதில் ஆதி சங்கர பகவத் பாதாசார்யருடைய விக்ரஹமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யஜுர் வேத பாடசாலை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. சுவாமிகள் வம்சத்தினர் சிரத்தையோடு ஆராதனை விழாவில் பங்கேற்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாசையன்று சுவாமிகளின் ஆராதனை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.