பதிவு செய்த நாள்
30
மார்
2013
11:03
சென்னை: பழம்பெரும் கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் மிக பெரிய பாலமாக, செம்பை வைத்தியநாத பாகவதர், இசை விழா திகழும் என, பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூறினார். பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், திருவனந்தபுரத்தில் நடத்தும், "தரங்கிணி இசை பள்ளி சார்பில், செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, வரும் ஆகஸ்ட் மாதம் 30, 31 மற்றும் செப்டம்பர் முதல் தேதி ஆகிய நாட்களில் தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நடத்தப்படுகிறது. இந்த இசை விழாவிற்கான சின்னத்தை, நேற்று, சென்னையில் வெளியிட்டு கே.ஜே.ஏசுதாஸ் பேசியதாவது: மார்கழி மாதம் வந்தால், மாணவர்களிடம் கர்நாடக இசை குறித்த ஆர்வம் தொற்றி கொள்கிறது. அதன் பிறகு தேர்வுகள் நடப்பதால் இசை ஆர்வம் குறைந்து விடுகிறது. இசை ஆர்வம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்காகவே, இந்த இசை விழா நடத்தப்படுகிறது. மேலும், மாணவர்களின் கலை ஆர்வம் தொடர்ந்து இருக்கும் வகையில், கர்நாடக இசை வல்லுனர்களை கொண்ட ஒரு குழு உருவாக்கப்படுகிறது. அந்த குழுவிடம் கர்நாடக இசை குறித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். இந்த இசை விழா பழம்பெரும் கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் மிக பெரிய பாலமாக விளங்கும். இவ்வாறு கே.ஜே.ஜேசுதாஸ் தெரிவித்தார்.