பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து, சித்திரை தேர்திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். வேறு எந்த ஸ்தலத்திலும் காணப்பெறாதபடி, இத்தலத்தில், அஷ்ட புஜங்களுடன் சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். அம்மன் விரதம் பல்வேறு வேண்டுதலுக்காக, பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பது உலக இயல்பு. ஆனால், சமயபுரம் மாரியம்மனோ, மரபுமாறி, உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலன்களுக்காவும் விரதம் இருப்பது சிறப்புக்குரியது. கடந்த மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பச்சைப்பட்டினி விரதம் துவங்கிய மாரியம்மனுக்கு, பக்தர்கள் வாரந்தோறும் கூடை, கூடையாக புஷ்பாஞ்சலி எனப்படும் பூச்சொரிதல் நடத்தி வழிப்பட்டனர். விரதத்தின்போது வழக்கமான தளிகை நைவேத்தியம் செய்யப்படவில்லை. தொடர்ந்து, 28 நாள் பச்சை பட்டினி விரதம் இருந்த அம்மன், பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்தார். இவ்விரதம் முடிந்ததும், சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்திகளையும் அம்மன் பெறுவதாக ஐதீகம். அதன்படி, படைத்தல் (கொடியேற்றுதல்), காத்தல் (ரிஷப வாகன காட்சி), அழித்தல் (திருத்தேர்), மறைத்தல் (ஊஞ்சல் பல்லக்கு), அருள்பாலித்தல் (தெப்பம்) ஆகிய, ஐந்து தொழில்களையும் சித்திரை திருவிழாவில், அம்மன் மேற்கொள்கிறார். கொடியேற்றம்
சிறப்புமிக்க சித்திரை திருவிழா, நேற்று காலை, 6.40 மணிக்கு மேஷ லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் தேதி சிம்ம வாகனம், 9ம் தேதி பூத வாகனம், 10ம் தேதி அன்ன வாகனம், 11ம் தேதி ரிஷப வாகனம், 12ம் தேதி யானை வாகனம், 13ம் தேதி சேஷ வாகனம், 14ம் தேதி மரக்குதிரை வாகனம், 15ம் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார். இதையொட்டி, நாள்தோறும் காலை, 10 மணிக்கு, அம்மன் பல்லக்கில் புறப்பட்டு, ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து, அபிஷேகம் கண்டருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும், 16ம் தேதி காலை, 10.31 மணிக்கு, மிதுன லக்னத்தில், வடம் பிடிக்கப்படுகிறது. 17ம் தேதி வெள்ளி காமதேனு வாகனம், 18ம் தேதி புஷ்ப பல்லாக்கு, 23ம் தேதி தங்க கமல வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து, மூலஸ்தானம் அடைகிறார். 19ம் தேதி இரவு, 8 மணிக்கு தெப்போற்ஸவம் நடக்கிறது. எச்சரிக்கை "கோவில் திருவிழாவுக்கென நன்கொடை எதுவும் வசூலிக்கப்படவில்லை. நன்கொடை வசூலிக்க யாரையும் நியமிக்கவில்லை. யாரிடமும் பணம், பொருள் கொடுத்து பக்தர்கள் ஏமாற வேண்டாம். யாராவது நன்கொடை வசூலித்தால் குற்றநடவடிக்கை எடுக்கப்படும், என்று கோவில் இணை கமிஷனர் இணை கமிஷனர் தென்னரசு எச்சரித்துள்ளார்.