பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். நாரதர் தவம் இருந்து அம்பாளை வழிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா 10 நாட்கள் கோலாகலத்துடன் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 31ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள், அம்மன் வீதியுலா வருதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. சர்வ அலங்காரத்துடன் அம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். இதுபோன்று காவடி எடுத்தும், அலகுகள் குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவு செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து நார்த்தாமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், விழா கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.