பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
திருச்சி: திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள காந்திநகர், தேவி கருமாரியம்மன் கோவில் 35ம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தினர். இரவு பொதுமக்களின் புஷ்பம் அம்மனுக்க சமர்ப்பிக்கப்பட்டது. பூச்சொரிதல் விழா முன்னிட்டு, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. வரும் 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி, மகா அபிஷேகம், அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 13ம் தேதி நடக்கும் இரண்டாம் நாள் திருவிழாவை தொடர்ந்து, தினமும் விழாக்கள் நடக்கிறது. 18ம் தேதி ஏழாம் நாள் விழா நடக்கிறது. வரும் 19ம் தேதி தீர்த்த குட விழா மற்றும் பால்குட விழா நடக்கிறது. காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், பன்னீர் குடம், சந்தன குடம், திருநீர் குடம் ஆகியவை புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். வரும் 20ம் தேதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. சக்தி கரகம், அக்னி சட்டி மற்றும் உற்சவ அம்மன் வீதி உலா நடக்கிறது. 21ம் தேதி சித்திரை திருவிழா மற்றும் தீ மிதி விழா நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் நடக்கும். 22ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 23ம் தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.