பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
10:04
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சன்னிதியில் பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் இனி மேல் அவர்களை நெட்டி தள்ளாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் பாபிராஜு தெரிவித்தார்.கடந்த வாரம், நடிகர் லாரன்ஸ், தன் மனைவி மற்றும் உறவினர்களுடன், திருப்பதி கோவில் சென்றார். அங்கு, வரிசையில் நின்றிருந்தபோது, லாரன்ஸ் மனைவி மற்றும் உறவினர்களைப் பிடித்துத் தள்ளி, அதிக நெருக்கடி ஏற்படுத்தினர். இது குறித்து, லாரன்சின் பேட்டி, பத்திரிகைகளில் வெளியானது; தேவஸ்தானத்திடமும் புகார் செய்யப்பட்டது. இதை அடுத்து, தேவஸ்தானம், புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவஸ்தான தலைவர் பாபிராஜு, நேற்று முன்தினம் கூறியதாவது: திருமலைக் கோவிலில், மூலவரை, பெண் பக்தர்கள் தரிசனம் செய்யும் போது, அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஆண் ஊழியர்கள், பெண் பக்தர்கள் மீது கை வைத்து இழுத்து தள்ளி விடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. இனிமேல், எந்த சூழ்நிலையிலும், பெண் பக்தர்கள் மீது, ஊழியர்கள் கை வைத்து நெட்டி தள்ளாதபடி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண் பக்தர்களும், பின்னால் வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, வழி விட்டு நகர வேண்டும். பெண் பக்தர்களும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.