காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தகரத்தால் ஷெட் அமைக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இங்குள்ள, நளன் குளத்தில் நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் இக் கோவிலுக்கு வருகின்றனர். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் நிலையில், திருநள்ளாரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளதால், பக்தர்களின் வசதிக்காக கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து பிரதான சாலை வரை இரும்பு தகரத்தால் ஷெட் அமைக்கப்பட்டு வருகிறது.