பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
11:04
பட்டிவீரன்பட்டி: ரங்கராஜபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி, ரங்கராஜபுரம் காவல் தெய்வமான மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடந்தது. கடந்த செவ்வாய் அன்று இரவு அம்மன் தங்க நகை அலங்காரத்துடன், முளைப்பாரி, வாணவேடிக்கை, கரகாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். நேற்று அதிகாலையில் கிடா வெட்டப்பட்டு, பூசாரி ரத்தம் குடித்தார். பல ஆண்டுகளாக தொடரும் அம்மனுக்கு மாவிளக்கு ஊட்டும் நிகழ்வு நடந்தது. கிராமத்தினர் பொங்கல் படைத்து, தீச்சட்டி எடுத்தனர். சேத்தாண்டி வேஷத்தில் பிச்சை எடுத்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை முடித்தனர். இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டுடன், அம்மன் பூஞ்சோலை செல்கிறார். திருவிழா ஏற்பாடுகளை ரங்கராஜபுரம் கிராமத்தினர் செய்தனர். சிங்காரக்கோட்டை, நெல்லூர் காலனி, ஒட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழாவை காண வந்திருந்தனர்.