பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
11:04
கம்பம்: ஆன்மிகமும், தியானமும் வாழ்க்கையில் பிரிக்க முடியாதது. தியானத்தின் மூலமே வாழ்க்கைக்கு தேவையான அருட்செல்வமும், பொருட் செல்வமும் கிடைக்கும், என்று தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில், மாதா அமிர்தானந்த மயி பேசினார்.
அவரது பேச்சு: மூன்று வித பாவங்கள் உள்ளன. முதல் பாவமானது, சிகிச்சை செய்தால் குணமாவது போன்றது. மருந்து மாத்திரைகளால் சரி செய்யும் நோய் போன்றது. இரண்டாவது பாவம் அறுவை சிகிச்சை தேவைப்படுவது போன்றது. மூன்றாவது பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். அதற்காக மனதை தளரவிடக்கூடாது. பிரார்த்தனை செய்ய வேண்டும். அன்பு செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் 18 வயது வரை தான், பெற்றோருடன் பிள்ளைகள் இருப்பார்கள். நமது நாட்டில் 40 வயதானாலும், வேலை கிடைக்காவிட்டால், தாய் சம்பாதித்து போடுவார். அந்தளவு அன்பு இருக்கும்.
சிலர் இப்போது கஷ்டப்படலாம் அது முற்பிறவி செய்த வினைகளால் வருவது. கர்மா வங்கியில் கடன் வாங்கியிருப்பீர்கள். அது தீரும் வரை கஷ்டம் இருக்கும். நன்றாக இருப்பவர்கள் புண்ணியம் செய்திருப்பார்கள். வாழ்க்கையில் சோர்ந்து போகக் கூடாது. மனஉறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறைவன் என்னுடன் இருக்கிறார் என்று நினைக்க வேண்டும். ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தியானமும், வாழ்க்கையும் பிரிக்க முடியாதது. தியானத்தின் மூலமே அருட்செல்வம், பொருட்செல்வம் பெற முடியும். இவ்வாறு பேசினார்.