கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2013 11:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. நேற்று மாலை 6.15 மணிக்கு பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் தரப்பில் சாமிக்கண்ணுவிற்கு அண்ணாதுரை தாலிக்கட்டினார். காலனி தரப்பில் ஆறுமுகத்திற்கு அய்யம்பெருமாள், தாலிக் கட்டினார். பின் , பாலிவிடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழா முடியும் வரை சாமிக்கண்ணு கோவிலிலும், ஆறுமுகம் பந்தலடியிலும் பணிகள் செய்வர். ஆறுமுகம் வீட்டில் நேற்று ஏற்றப்பட்ட விளக்கினை விழா முடியும் வரை அணையாமல் பெண்கள் பார்த்துக் கொள்வர். வரும் 23ம் தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, டில்லி, சென்னை, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். 24 ம்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தாலிகளை அறுத்தெறிந்து, விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுவர். பின், அங்குள்ள கிணற்றில் குளித்துவிட்டு ஊருக்கு திரும்புவர். 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.