புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் கிராமத்தில் உள்ளது கலியுக அய்யனார் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் திருக்கோவில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது. இங்கு உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் நிதி உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வேதிகை பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் நான்கு கால பூஜைகள் நிறைவடைகிறது. இதையடுத்து காலை 10.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. 11 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் வடவாளம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அய்யனாரை தரிசிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.