துறையூர்: துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் பால்குடம் எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்தியும் பக்தர்கள் கொண்டாடினர். துறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் 1,008 பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் மூங்கில் தெப்பக்குளத்திலிருந்து எடுத்துவரப்பட்டு பாலக்கரை மற்றும் பெரியகடைவீதி வழியாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் நீண்ட அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் சிறுவர், சிறுமியர் ஸ்வாமி வேடமணிந்து நடனமாடியபடி சென்றனர். துறையூரை அடுத்த காளிப்பட்டியில் மாரியம்மன் கோவிலுக்கு கிராம பொதுமக்கள் சார்பாக காவடி எடுத்து பால்குடம் எடுத்துச்சென்றனர். ஆறுநாட்டு வேளாளர் சமூகம் சார்பில் காவடி, பால்குடம் எடுத்து துறையூர் நந்திகேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.