சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி செய்து தராததால், பக்தர்கள் தவிக்கின்றனர். சிவகாசியில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான விஸ்வநாத சுவாமி, விசாலாட்சிஅம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் நடைபெறும் பள்ளி எழுச்சி, உச்சிகால, பள்ளியறை பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கு கொள்கின்றனர். பூஜைக்கு பின் உபயதாரர்கள் ஏற்பாட்டில், பக்தர்களுக்கு பால்,பழம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. சாப்பிட்ட பின் கை கழுவ தண்ணீர் வசதி இல்லை. பக்தர்கள் தண்ணீர் இன்றி தேடி அலைகின்றனர். கோயில் அருகே உள்ள டீ கடை, ஓட்டல்களில் கை கழுவி செல்கின்றனர். கோயில் வரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளது. இது பழுதடைந்து மாதங்கள் பல ஆகிவிட்டன. பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர, நிர்வாகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. கோயில் வரும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். கோயில் நிர்வாகம் குடிநீர் மற்றும் கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி செய்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.