பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
அவிநாசி: சித்திரை தேர்த்திருவிழாவுக்கு வருகை புரிந்த, திருமுருகநாத சுவாமியை எதிர்கொண்டு அழைக்கும் விழா நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 20ம் தேதி இரவு 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 22ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ரதோற்சவம், 23ம் தேதி பெரிய தேரோட்டம், 24ம் தேதி அம்மன் தேரோட்டம் ஆகியன நடக்கிறது. சித்திரை திருவிழாவில் பங்கேற்க, திருமுருகன்பூண்டியிலிருந்து திருமுருகநாதர் வருகை காட்சி, நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு நடந்தது. அவிநாசிலிங்கம்பாளையம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் மற்றும் அஞ்சல் நிலைய வீதியிலுள்ள அரச மரத்து பிள்ளையார் கோவில் வீதியிலும், திருமுருகநாதரை, அவிநாசியப்பர் எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடந்தது. சுவாமிக்கு வரவேற்பு பூஜை அளிக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதன்பின், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள ஸ்ரீரமண சேவாஸ்ரமத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டன. மேற்கண்ட நிகழ்ச்சியின்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்த திருமுருகநாத சுவாமி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு நள்ளிரவு 12.00 மணிக்குச் சென்றார்.