ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2013 11:04
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அமிர்தவள்ளி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவிலில் நேற்று சிவன் மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அமிர்தவள்ளி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் ஏழு நாட்களுக்கு சூர்யோதய நேரத்தில் கருவறையில் உள்ள சிவன் மற்றும் அமிர்தவள்ளி அம்பாள் சிலையின் பாதத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று அமிர்தவள்ளி சமேத ஆதிமூலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 6:10 மணிக்கு சூர்யோதயம் நடந்தது. சூரிய ஒளி கருவறையில் வலது பக்கத்தில் இருந்து துவங்கி முழு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. பக்தர்கள் நமச்சிவாய நமக என்ற கோஷத்துடன் சிவனை வழிபட்டனர். கோவில் குருக்கள் சபாரத்தினம் சூரிய பூஜையை நடத்தினார். காலை 6:20 வரை சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து அமிர்தவள்ளி கோவிலில் சூரிய ஒளி கருவறையில் உள்ள அம்பாளின் பாதத்தின் மீது 6:20 மணிக்கு விழுந்து 6:25 மணி வரை பூஜை நடந்தது. பரங்கிப்பேட்டை, அகரம், அரியகோஷ்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜையை சபாரத்தினம் குருக்கள், ருத்திரகிரி குருக்கள், பாபு குருக்கள் ஆகியோர் செய்தனர்.