பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகஸ்தியருக்கு சிவபெருமான், பார்வதி திருமணக்கோல காட்சியருளும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தபோது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அப்போது உலகை சமப்படுத்த அகஸ்தியரை சிவபெருமான் தென்திசைக்கு அனுப்பி வைத்தார். அப்போது அகஸ்தியர், எனது தாய், தந்தையான தங்களின் திருமணத்தை காண எனக்கு அருகதை இல்லையா? என வினவினார். அதற்கு சிவபெருமான் நீ எந்த இடத்தில் இருந்து உலகை சமன் செய்கிறாயோ அந்த இடத்தில் தம்பதி சமேதராய் காட்சி தருவதாக அருளினார். இந்த ஐதீக திருமணக்கோல காட்சி நிகழ்ச்சி, வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் ஸ்வாமியின் திருவுருவத்துக்கு சந்தனம் பூசப்பட்டது. இந்த சந்தனம் அடுத்தாண்டு திருமணக்கோலக்காட்சி நடக்கும் வரையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று திருமணக்கோல காட்சி விழாவையொட்டி கோவில் சன்னதியில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க சிறப்ப யாகபூஜை நடந்தது. பின்னர் ஸ்வாமிக்கு தீபாராதனை நடந்தது. ஸ்வாமி சன்னதி முன் திருமால், மகாலட்சுமி முன்னிலையில் சிவபெருமான் பார்வதி திருமணக்கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்குவந்த பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், தாம்பூலம், பிரசாதம் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், மேலாளர் பழனிவேல், வேதாரண்யம் சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் ஜானகிராமன், நாகை தெற்கு மாவட்ட வணிகர் சங்க தலைவர் குணசேகரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.