பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், பக்தர்கள் மூலம் காணிக்கை செலுத்தப்பட்டு வந்த 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நடந்து, ஆறு லட்சத்து, 88 ஆயிரத்து, 542 ரூபாய் வசூல் கணக்கிடப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவில் உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோவில் நிர்மாணம், கோபுர அமைப்பு, கட்டிட நுட்பம் ஆகியவற்றை குறித்து, அறிந்து, நேரில் காணும் ஆர்வத்தில் வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள, பெருவுடையார், பெரியநாயகி, வராஹி, விநாயகர், முருகன், கருவூரார் சன்னதி உள்பட 11 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தினத்தில் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் 11 உண்டியல்களும் திறந்து, காணிக்கை பணம் எண்ணும் பணியில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயயுதவிக்குழுவினர் ஈடுபட்டனர். இப்பணியை ஹிந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், செயல் அலுவலர் அரவிந்தன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். முடிவில், 11 உண்டியல் மூலம், ஆறு லட்சத்து, 88 ஆயிரத்து, 542 ரூபாய் காணிக்கை பணம் வசூலாகியிருந்தது, இதில், 107 வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இம்முறை காணப்படவில்லை என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.