பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
காட்டுமன்னார்கோவில்: தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்ததால், பீதி அடைந்த கிராம மக்கள், விடிய விடிய பரிகார பூஜை நடத்தினர். கடலூர் மாவட்டம், குமராட்சி அடுத்துள்ளது கோப்பாடிசெட். இங்கு 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரே ஆண்டில் தொடர்ந்து 10 பேர் மரணமடைந்தனர். இவர்கள் அனைவரும், 40 வயதிற்குட்பட்டவர்கள். விபத்து, நெஞ்சுவலியால் இறப்புகள் நிகழ்ந்தன. தொடர் மரணங்கள், கிராம மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இதனால், ஒரு சாமியாரை அணுகி, ஆலோசனை பெற்று, பரிகாரம் செய்ய, கிராமத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது; ஆலோசனையும் பெறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கிராம பொது இடத்தில், விடிய விடிய யாகம் நடந்தது. கிராமத்தில் அனைவரும், விழித்திருந்து யாகத்தில் பங்கேற்றனர். யாகத்தின் போது, சாமியாரின் ஆலோசனைப்படி, நளளிரவு, 1:00 மணிக்கு, அனைவரும் பொங்கல் வைத்து வழிபட்டனர். வீடுகளைச் சுற்றி, நான்கு மூலையிலும் குச்சிகளை நட்டனர். யாகம் அதிகாலை வரை நடந்தது.