பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேச பெருமான் கோவிலில், சித்திரை உத்திரப் பெருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில், சுந்தராம்பிகை உடனாகிய கச்சபேச பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருமால் கச்சப(ஆமை) உருவில், சிவனை பூசித்து வரங்கள் பெற்றதால், இங்குள்ள ஈஸ்வரன் கச்சபேச பெருமான் என, அழைக்கப்படுகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை உத்திரப் பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழா, நேற்று துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, கொடியேற்றம் நடந்தது. அதன்பின் பவழக்கால் சப்பரத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. இரவு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை உற்சவம் நடைபெற உள்ளது.