பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
பெரிய நாகபூண்டி:சித்திரை பிரம்மோற்சவம் நான்காம் நாளான இன்று, நாகேஸ்வர சுவாமி, நாக வாகனத்தில் வீதி உலா வருகிறார். ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி நாகேஸ்வர சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இந்த கோவிலில், மூலவருக்கு நள்ளிரவில் பாம்பு பூஜை செய்வதாக ஐதீகம். அந்த பூஜையின் போது, கோவிலுக்குள் யாரும் அனுமதி இல்லை. அர்ச்சகர்களும், கோவிலுக்கு வெளியில் தான் இருப்பர். இந்த முக்கிய நிகழ்வு நேற்று இரவு நடந்தது. முன்னதாக உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, இன்று காலை, 6:00 மணிக்கு, கோவில் முன் மண்டபத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர், பாம்பு புற்றை சுற்றி வலம் வரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின், காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடைபெறும். மதியம், 12:15 மணிக்கு அன்னதானம் நடைபெறும். வரும், 21ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறும். 29ம் தேதியன்று பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.