பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
கோவை: கோவை புனித மைக்கேல் ஆதிதூதர் பேராலயம் புதிதாக கட்டப்படுவதை தொடர்ந்து, பழைய கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கோவை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் தலைமை ஆலயமாக, பெரியகடை வீதியிலுள்ள புனித மிக்கேல் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. பேராலயத்தின் கட்டடம் பழுதான நிலையில் இருந்ததால், ஆலயத்தை இடிக்க மறை மாவட்டம் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து, பங்கு பேரவையினர் மற்றும் கத்தோலிக்க மக்களிடம் புதிய ஆலயம் கட்டுவது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு, புதிய ஆலய வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பழமைவாய்ந்த பழைய பேராலயம், கடந்த புதன் கிழமையிலிருந்து இடிக்கப்பட்டு வருகிறது. பேராலய வளாகத்தில், தற்காலிகமாக "செட் அமைக்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழமை வாய்ந்த தேவாலயத்தின் பின்புறம் அமைந்துள்ள, ஆயர் இல்லமும் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட உள்ளது. பேராலயம் இடிக்கப்பட்டு வருவதை, மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவ மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மேலும், தங்களது மொபைல் போனில், பழைய கட்டடத்தின் நினைவுகளை புகைப்படங்களாக எடுத்து செல்கின்றனர். இந்த மாத இறுதிக்குள் பேராலயம் இடிக்கப்பட்டு, அடுத்த மாதம் புதிய பேராலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில், போப் ஆண்டவரின் தூதர் பங்கேற்க உள்ளார். புதிய பேராலயம் மற்றும் ஆயர் இல்லம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.