பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த திருநங்கைகள், நேற்றிரவு தாலிக் கட்டிக் கொண்டு, உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், கடந்த, 9ம் தேதி, சித்திரை பெருவிழா துவங்கியது. சென்னை, மும்பை, டில்லி, கோல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூவாகம் வந்திருந்த திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக் கொண்டு, நேற்றிரவு முழுவதும் உற்சாகமாக கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, அரவாண் சிரசுக்கு திருக்கண் திறந்து, காலை, 6:30 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது. தேர் செல்லும் வழியில், 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியல்களாக கற்பூரங்களை ஏற்றியும், திருநங்கைகள் கும்மியடிப்பர். பகல், 12:00 மணிக்கு நடக்கும், அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்து, விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைப்பர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து, தங்கள் ஊருக்குத் திரும்புவர். மாலை, 5:00 மணிக்கு உறுமைசோறு (பலி சாதம்) படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர். மாலை, 7:00 மணிக்கு காளிக்கோவிலில், அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, சென்னை, விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உட்பட, பல்வேறு பகுதிகளிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம், விழுப்புரத்தில், திருநங்கைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மிஸ் கூவாகமாக, சேலத்தைச் சேர்ந்த சங்கவி தேர்வு செய்யப்பட்டார். நேற்று காலை நடந்த, மிஸ் கூவாகம் - 2013 அழகி போட்டியில், தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங் தேர்வு செய்யப்பட்டார்.