பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
மோகனூர்: மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் விழா கடந்த, 8ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் அதிகாலை காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்தில் ஊற்றி ஸ்வாமியை வழிபட்டனர். கடந்த, 21ம் தேதி இரவு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை, தீ குண்டம் பற்றவைக்கப்பட்டது. அன்று மதியம் காவிரி ஆற்றுக்குச் சென்ற, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியும், 9 மணிக்கு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் மாரியம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். அன்று இரவு, 10 மணிக்கு கம்பம் பிடிங்கி ஆற்றில் விடப்பட்டது. இன்று காலை, 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.