பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், விழாவையொட்டி சக்தி கும்பஸ்தாபனமும், பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 6.00 மணிக்கு முத்தங்கி அலங்கார பூஜை நடந்தது. இதில், முத்துகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9.00 மணிக்கு, அம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓத நடந்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். காலை 11.00 மணிக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள திருவீதி உலா நடந்தது. முக்கிய வீதி வழியாக வந்து, அம்மன் அருள்பாலித்தார். இரவு 8.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், மாலை 4.00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
* கோட்டூர் ரோட்டில் உள்ள விண்ணளந்த காமாட்சி அம்மன் கோவிலில், நடந்த விழாவில் நேற்று காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு, ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். பகல் 12.00 மணிக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6.00 மணிக்கு சவுந்திரராஜப்பெருமாள் கோவிலிலிருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு மேல் காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவமும், மதியம் 12.30 மணிக்கு விசேஷ பூஜை, அலங்காரமும், அன்னதானமும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது.