பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
ஓசூர்: மத்திகிரி கோட்டை மாரியம்மன் தேர்த்திருவிழாவையொட்டி, அம்மன் உற்சவ விழா நடந்தது.இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 24ம் தேதி துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் தேர்த்திருவிழா நடந்தது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தில் இருந்து மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தேரை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் இழுத்து வந்தனர். தேரில் கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேர்த்திருவிழா முடிந்ததும், இரவு அம்மனுக்கு மா விளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது.நேற்று தின்னூர் கிராமத்தினரால், 2 மணிக்கு அம்மன் உற்சவ திருவிழா கொண்டாடப்பட்டது. கிராம தேவதைகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 4 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது.பக்தர்கள், குழந்தைகளை ஸ்வாமிக்கு இணையாக வைத்து நூதன வழிப்பாட்டில் ஈடுபட்டனர். இன்று பழைய மத்திகிரி மற்றும் குருபட்டி கிராமத்தினரால் மாரியம்மன் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு கலைநிகழ்ச்சிள் நடக்கிறது.விழாவில், மத்திகிரி, பழைய மத்திகிரி, மிடிகிரிப்பள்ளி, நவதி, குருபட்டி, அந்திவாடி, கர்னூர், தின்னூர், அம்மன் நகர் சுற்றுவட்டார பகுதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வாசுதேவன், சிவண்ணா செய்து வருகின்றனர்.