பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
போடி: போடியில் சீனிவாசப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில், தங்க வெண்பட்டு உடுத்தி காலை 7.31 மணிக்கு, கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் தங்க வெண்பட்டு உடுத்தி அரோகரா, கோவிந்தா என்ற கோஷங்களுடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் நகர்வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாசப்பெருமாளின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுரேஷ் செய்திருந்தார்.
*பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டார். முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கள்ளழகருக்கு சூட்ட மாலை கொண்டு வரப்பட்டது. முதல் மாலையை ஏற்றுக்கொண்ட கள்ளழகர், குதிரை வாகனத்தில் பவனி வந்தார். கள்ளழகருக்கு பச்சைபட்டும், பச்சைபொட்டும் சாற்றப்பட்டது. கோவிந்தா, கோவிந்தா என நாம ஒலி, ஒலிக்க வராகநதி கரையோரங்களில் மண்டகப்படிதாரர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், கள்ளழகருக்கு பச்சைபட்டும், பச்சைபொட்டும் கிடைத்துள்ளது. இதனால் பெரியகுளம் பகுதியில் விவசாயம் செழிக்கும், பொதுமக்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்,என்றார்.
*உப்புக்கோட்டையில் பெருமாள் முல்லையாற்றில் பக்தர்கள் கரகோஷத்துடன் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடந்தது. சித்திரபுத்திரனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்ர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.