பதிவு செய்த நாள்
07
மே
2013
10:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளும் ஸேவை நடந்தது."பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் தினந்தோறும் விசேஷம் என்றாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட திருவிழாவும் வெகு பிரசித்திப் பெற்றவை.ஆயிரம் ஆண்டுக்கு மேல் நடந்து வரும் விருப்பன் திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி, ஆஸ்தான மண்டபங்களில் மண்டகப்படி கண்டருள்கிறார்.
அபூர்வ ஸேவை: ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். அதேபோல, வெள்ளிக்குதிரை வாகனத்தில், சித்திரைத்திருவிழாவின் போது மட்டுமே எழுந்தருள்வார். திருவிழாவின், 8ம் நாளான நேற்று காலை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். கழுத்தில், விலைமதிப்பற்ற சரலை மணிமாலை, நீலநாயகம் ஆகிய நகைகளை அணிந்திருந்தார். கழுத்தின் பின்புறம், பெரிய பதக்கம் உள்ளிட்ட அணிகலன்களை அணிந்திருந்தார்.பொதுவாக, தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருளும்போது, வையாளி போடுவது (முன்னும், பின்னும் ஆட்டுவது) வழக்கம். அப்போது நகைகள், கற்கள் கீழே விழ வாய்ப்புள்ளதால், ஒரு சில அணிகலன்களை மட்டுமே நம்பெருமாள் அணிந்திருப்பார்.வெள்ளிக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருளும்போது வையாளி போடாமல், வீதியுலா வருவதால், ஏராளமான அணிகலகன்கள் அணிவதும், அனைவருக்கும் நன்கு தெரிவதை போல கழுத்தின் பின்புறம் அணிவதும் வழக்கமாக இருக்கிறது.அதிருப்தி-1: வெள்ளிக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருளும்போது, 40க்கும் மேற்பட்ட விலை மதிப்பற்ற அணிகலன்களை அணிந்திருப்பது வழக்கம். தற்போது, வெறும், 15 அணிகலன்கள் மட்டுமே அணிந்திருந்தார்.முன்புபோல நம்பெருமாள் அணியும் அனைத்து அணிகலன்களும் வழக்கப்படுவது இல்லை. நகைகள் தொலைந்தாலோ, நகைகளில் உள்ள கற்கள் தொலைந்தாலோ அர்ச்சகர்களே பொறுப்பு என்பதால் இவர்களும் கண்டு கொள்வதில்லை.அதிருப்தி-2: சித்திரைத்திருவிழாவின்போது, பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள், ஆஸ்தான மண்டபங்களில் எழுந்தருள்வார். நம்பெருமாள் வருகையை, உபயதாரர்கள் தங்களது வீட்டில் நடக்கும் விசேஷத்தை போல, பிரம்மாண்டமாக கொண்டாடுவர்.தற்போது, உபயதாரர்கள் வாழைமரம், தோரணம் கட்ட தடை விதித்துள்ள கோவில் நிர்வாகம் அதற்குரிய பணத்தை அவர்களிடம் வசூல் செய்துவிடுகின்றனர். ஆனால், வாழைமரம், தோரணம் கூட கட்டுவதில்லை. இதனால் உபயதாரர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.