பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
நகரி: சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனையால், திருமலையில், வெங்கடேச பெருமானை தரிசிக்க வரும், வி.ஐ.பி., பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. "திருமலையில், வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வி.ஐ.பி., தரிசன டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என, திருப்பதி தேவஸ்தானம், கடந்த, 15ம் தேதி உத்தரவிட்டது. இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகம், பெரிய அளவில் பிரசாரம் செய்யாததால், வி.ஐ.பி., தரிசன டிக்கெட் மூலம், சுவாமி தரிசனம் செய்ய வருவோரில் பலர், சம்பிரதாய உடையணிந்து வராமல், நாகரீக உடையுடன் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், இந்த நடைமுறையை அமல்படுத்திய முதல் நாளான, 15ம் தேதி, 400 பக்தர்களும், 16ம் தேதி, 300 பக்தர்களும் வி.ஐ.பி., தரிசனத்திற்காக, 500 ரூபாய் டிக்கெட் பெற்ற நிலையிலும், சுவாமி தரிசனத்திற்கு வரவில்லை என, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு கூறினார். நேற்று முன்தினம் திருமலையில், தேவஸ்தான அதிகாரிகளிடம், வி.ஐ.பி., தரிசனம் குறித்து, ஆலோசனை செய்த அவர், சம்பிரதாய உடையணிந்து வருவது குறித்து, பக்தர்களிடையே விரிவான அளவில், விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.