பதிவு செய்த நாள்
20
மே
2013
10:05
லாலாப்பேட்டை: சிந்தலவாடி மகாமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் தேர் பவனியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தனர். லாலாப்பேட்டையை அடுத்த சிந்தலவாடி மகாமாரியம்மன் கோவில், பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் அம்மனுக்கு பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, வைகாசி திருவிழா, கடந்த, 5ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. தினமும் அதிகாலை முதல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தீர்த்தக்குடம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கடந்த, 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை, பால்குட நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி தேர்பவனி நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினர். மா, பலா, வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் கொண்ட, 20 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தேரை, நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பக்தர்களும் கோவிலைச்சுற்றி தோளில் சுமந்து வர, தேர் கோவிலை மூன்று முறை வலம் வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து தேர் நிலைக்கு வந்தது. பின் அம்மனுக்கு மஹா தீபாரதனை நடந்தது. விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில், தண்ணீர்பந்தல் மற்றும் அன்னதானம் நடந்தது. இன்று அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தல், தொட்டில் குழந்தை எடுத்தல், மாவிளக்கு போடுதல் உள்ளிட்ட பிரார்த்தனை, நேர்த்திக்கடன் நிறைவேற்றல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 23ம் தேதி அம்பாள் மஞ்சள் நீராடி குடிபுகுந்து காவிரிக்கு செல்லும் வைபவமும், 26ம் தேதி முத்துப்பல்லாக்கு விழாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மகிளிப்பட்டி சரவணன் (பொறுப்பு), சிந்தலவாடி முருகேசன், கணக்கர் முத்துசாமி உட்பட ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசாஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.