பதிவு செய்த நாள்
22
மே
2013
10:05
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, செவ்வாய்கிழமை பக்தர்கள், எட்டு மணி நேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையைத் தொடர்ந்து, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில வாரங்களாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று தரும தரிசன வரிசையில், ஏழுமலையானை தரிசிக்க, எட்டு மணி நேரம் ஆனது. பாத யாத்திரை பக்தர்களுக்கு, இரண்டு மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்களுக்கு, மூன்று மணி நேரமும் ஆனது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று, "கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.திரும லை - திருப்பதி தேவஸ்தானம், வருடத்தில், நான்கு நாட்கள், "கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் (கோவிலை தூய்மை செய்வது) நடத்துவது வழக்கம். குங்கிலியம், புனுகு, ஜவ்வாது, மஞ்சள் முதலிய வாசனை திரவியங்களால் கோவில் உட்பிரகாரம், கருவறை சுவர்கள் உள்பட, கோவிலின் அனைத்து பகுதிகளையும் கழுவி, சுத்தம் செய்வர். இது, பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், வரலட்சுமி விரதம், கல்யாணோத்சவம் முதலிய உற்சவங்கள் நடைபெறவுள்ள நாளுக்கு முன் வரும், செவ்வாய்க்கிழமை செய்யப்படும். பத்மாவதி தாயாருக்கு, இம்மாதம், 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை, வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. அதற்காக, நேற்று, "கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. வசந்தோற்சவத்திற்காக, நாளை, முளைவிடுதல் விழா நடத்தப்படுகிறது. வசந்தோற்சவம் நடைபெறவுள்ள தினங்களில், ஆர்ஜித சேவைகள், ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், லட்சுமி பூஜை முதலிய சேவைகள், ரத்து செய் யப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கோவிந்தராஜ பெருமாள் கருட சேவை: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நடந்து வரும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நேற்று காலை, பல்லக்கு உற்சவத்தில், மோகினி அவதாரத்தில், கோவிந்தராஜ பெருமாள் மாட வீதியில் வலம் வந்தார்.
24ம் தேதி சுப்ரபாத நேரம் மாற்றம்: திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை மற்றும் அபிஷேக சேவை நேரம், மே, 24ம் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக, திருமலை - திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலையில் தினமும், சுப்ரபாத சேவை அதிகாலை, 3:00 மணிக்கும், வெள்ளிக்கிழமையன்று, அபிஷேகம், 4:30 மணிக்கும் நடப்பது வழக்கம். இம்மாதம், 24ம் தேதி, திருமலையில், "தரி கொண்ட வெங்கமாம்பா என்ற தெலுங்கு பெண் கவிஞரின் பிறந்த தினத்தை ஒட்டி, சுப்ரபாத சேவை நேரமும், அபிஷேக சேவை நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரபாத சேவை, அதிகாலை 2:00 மணிக்கும், அபிஷேகம், 3:30 மணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள வேண்டிய பக்தர்கள், அதிகாலை, 1:00 மணிக்கும், அபிஷேக சேவையில் கலந்து கொள்ள வேண்டியவர்கள், அதிகாலை, 2:30 மணிக்கும், "வைகுண்டம் க்யூ காம்பிளக்சிற்கு வர வேண்டும், என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.