பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
சென்னை: சேலம் மாவட்டத்தில், கோவில் திருவிழாவில் எருதாட்டம் நடத்த, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை, சென்னை ஐகோர்ட் வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம், புதூர் அக்ரஹாரம் கிராமத்தில், வென்னான்குடி முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, இம்மாதம், 23ம் தேதி எருதாட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, சேலம் கலெக்டர், அனுமதி மறுத்துவிட்டார்.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சிவனாந்தம் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி வேணுகோபால் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார்.
நீதிபதி வேணுகோபால் பிறப்பித்த உத்தரவு: ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுவதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டரிடம், 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் பரிசீலித்து, "எருதாட்டம் நிகழ்ச்சிக்கு, சேலம் கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.