பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டாம் நாள் உற்சவத்தில், காலை 4:00 மணிக்கு, ஹம்ச வாகனமும், மாலை 5:00 மணிக்கு, சூரியபிரபை வாகனமும் நடைபெற்றது. நேற்று, பிரபல உற்சவமான, கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, காலை 4:00 மணிக்கு, கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து, கோபுர தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, "கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பி, பெருமாளை வழிபட்டனர். வழி நெடுகிலும் பக்தர்களுக்கு, அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, அனுமந்த வாகன உற்சவம் நடைபெற்றது. இன்று காலை, சேஷ வாகனமும், மாலை, சந்திர பிரபை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.