பதிவு செய்த நாள்
29
மே
2013
11:05
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று, கோலாகலமாக நடந்தது, இதில், ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 22ம் தேதி துவங்கியது. 6வது நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை, தங்க சப்பரத்தில், ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலத்தில், சுவாமி எழுந்தருளி, சூர்ணாபிஷேகமும் நடந்தது. மாலை, யானை வாகன உற்சவம் நடந்தது.தேரோட்டம்பிரபல உற்சவமான தேரோட்டம், நேற்று காலை 5:00 மணிக்கு, நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை 3:30மணி முதல், 4:30மணி வரை, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். தேரடியில், பல்வேறு பூஜைகளுக்கு பின்னர், காலை 6:15 மணிக்கு, தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என, கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகளை வலம் வந்து, 11:30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. நகராட்சி சார்பில், சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.பாதுகாப்பு தேரோட்டத்திற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், எட்டு ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள், 250 காவலர்கள் ஆகியோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க, கோவில் முகப்பு பகுதியிலும், வளாகத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன.
போக்குவரத்து மாற்றம்: தேரோட்டத்தை முன்னிட்டு, நகரில் முக்கிய வழித் தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. திருப்பதி, திருத்தணி, வேலூர் வழித்தட பேருந்துகள் பொன்னேரிக்கரை, தாமல்வார் தெரு வழியாக, பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள், மிலிட்டரி சாலை வழியாகவும், கல்பாக்கம், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், முத்தியால்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றி விடப்பட்டன. வந்தவாசி, உத்திரமேரூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள், ஓரிக்கை, செவிலிமேடு புத்தேரி தெரு வழியாக பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.