பதிவு செய்த நாள்
29
மே
2013
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, குரு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. நவ கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுவது குரு. நவ கிரக சன்னிதிகளில், நவ கிரகங்களில் ஒருவராக குரு அமர்ந்துள்ளார். இவருக்கு, தேவகுரு, பிரகஸ்பதி, வியாழ பகவான் என, பல பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றால், அறிவில் சிறந்தவர் என்றும், குரு என்றால், இருளை போக்குபவர் என்றும் பொருள். குரு தொடர்பான தகவல்கள், ரிக்வேதம், ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜோதிடத்தின் படி, குரு பலம் இருந்தால் தான், எதிலும் வெற்றி பெற முடியும் என்பது ஐதீகம். திருமணம் நடைபெற குரு பலம் தேவை. தென் இந்தியாவில், குருவுக்கு தனி கோவில், காஞ்சிபுரத்தில் மட்டும் தான் உள்ளது. காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையத்தில், வேகவதி ஆற்றின் வடக்கு கரையில், கமலாம்பிகை உடனுறை காயாரோகணேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது. குரு பகவான் சன்னிதி நவ கிரகங்களில் ஒன்றான குரு பகவானுக்கு, மூலவருக்கு எதிரே உட்பிரகாரத்தில், தனி சன்னிதி உள்ளது. குரு பகவான், இறைவனை வழிபடும் நிலையில், கைகளை நெஞ்சுக்கு நேர் கூப்பி வணங்கும் நிலையில் அமர்ந்தபடி, காட்சி அளிக்கிறார். குரு பகவான், தனி சன்னிதியில் எழுந்தருளியிருப்பதால், இக்கோவில், குரு கோவில் என்றே அழைக்கப்படுகிறது. குரு பகவான் ஆண்டுதோறும், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குரு பெயர்ச்சி என, அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, குரு பகவான் நேற்று இரவு 9:10 மணிக்கு, ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த, குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு கோவில்களில், காலை, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. கோவிந்தவாடி அகரம் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், குரு கோவில் உள்ளது. இங்கு, மவுன குருவாகிய தட்சிணாமூர்த்தியே, ஆதி குருவாக விளங்குகிறார். பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை, குரு பகவானாக வழிபடுகின்றனர். இக்கோவிலில், தட்சிணாமூர்த்தி ஜடாமுடியில், பிறை சந்திரனை தாங்கிக் கொண்டு, இடது மேல் கையில் அக்னி, வலது மேல் கையில் சர்ப்பம், இடது கீழ் கையில் மறைச்சுவடி, வலது கையில் சின்முத்திரை காட்டியபடி உள்ளார்.
யோக தட்சிணாமூர்த்திக்கு, தமிழகத்தில் இங்கு மட்டும், தனி கோவில் உள்ளது. இக்கோவிலில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாங்கால் கூட்ரோடு பாவூர், சோதியம்பாக்கம் காகபுஜண்டர் குரு கோவிலில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், 10:00 மணிக்கு, சிறப்பு யாகமும், மாலை 6:00 மணிக்கு, உற்சவ மூர்த்தி அலங்காரமும், இரவு 9:30 மணிக்கு, குரு பெயர்ச்சி மகா ஆராதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.திருப்போரூர் திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், பழமை வாய்ந்த நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ சன்னிதி உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, யாக சாலை பூஜைகளும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, மலர் அர்ச்சனை வைபவம் நடந்தது. இதில், பக்தர்கள் மற்றும் தமிழக வன துறை அமைச்சர் பச்சைமால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, வழிபட்டனர்.