பதிவு செய்த நாள்
30
மே
2013
10:05
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தாம்பத்யதட்சிணாமூர்த்திக்கு, குருப்பெயர்ச்சி விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது மரகதாம்பிகா உடனுறை பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். பிரதோஷம் உருவாக காரண மான இக்கோவில், வளாகத்தில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, தனது மனைவி கவுரியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, இங்கு தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக, மாலை, 3:00 மணிக்கு மகாசங்கல்பம், அர்ச்சனையும், தொடர்ந்து கணபதி பூஜை, புண்யாஹவசனம் ஆகிய நிகழ்ச்சிகளும், யாக சாலை அமைத்து, குருபகவான், நவகிரக, நட்சத்திர மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திர ஹோமம் ஆகியவை நடந்தன.இரவு, 8:00 மணிக்கு குருபகவான் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. குருப்பெயர்ச்சியை ஒட்டி, காலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் மதுரெட்டி மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.திருவள்ளூர்தீர்த்தீஸ்வரர் கோவிலில், குரு தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. பூங்கா நகரில் உள்ள சிவா-விஷ்ணு கோவிலில், குரு தட்சிணாமூர்த்திக்கும், காக்களூரில் உள்ள யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.இங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:10 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, குரு ஸ்தலத்தில் பரிகார மகா யாகம், 108 ஹோம திரவியங்களை கொண்டு நடத்தப்பட்டது. அதன்பின் குருபகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில், கூவம் சிவன் கோவில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திருத்தணி திருத்தணி ம.பொ.சி., சாலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவில், நாபளூர் காமாட்சி அம்மன்உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், கே.ஜி.கண்டிகை மலைக்கோவிலில் உள்ளசித்தீஸ்வரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.