பதிவு செய்த நாள்
30
மே
2013 
10:05
 
 திருநெல்வேலி: குறிச்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் 90 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிச்சி மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாத சுவாமி கோயில் மிகவும் பழமைவாய்ந்தது. இக்கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசை, தேவாரம், திருமுறை பாராயணம், அதிகாலை 4.15 மணிக்கு பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், ஸ்பர்சாஹூதி, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள், தேவாரம், திருமுறை பாடப்பட மங்கள வாத்யங்கள் முழங்க யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. மூலவர் விமானம், அம்பாள் விமானம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் காலை 6.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சொக்கநாத சுவாமி, மீனாட்சிஅம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. மாலையில் பிரசன்ன பூஜை, பூவாபரண பூஜை, சொக்கநாத சுவாமி மீனாட்சியம்பாள் திருக்கல்யாணமும், தீபாராதனையும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஏரல் சங்கரபட்டர், அர்ச்சகர் கிருஷ்ணகுமார் பட்டர் நடத்திவைத்தனர். விழாவில் செயல் அலுவலர் தனலெட்சுமி, ஆய்வர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். குறிச்சி கணேசமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.