திருநெல்வேலி: வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. வீரவநல்லூர் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கம்பளத்தம்மன், சுடலைமாடசாமி கோயில் கொடை விழா கடந்த 21ம் தேதி கால்நாட்டுலுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 26ம் தேதி மாலையில் திருவிளக்கு பூஜை மற்றும் இரவில் அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 27ம் தேதி மாலை தாமிரபரணி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வில்லிசை நடந்தது. கொடை விழாவான (28ம் தேதி) நேற்று முன்தினம் காலையில் பால்குடம், காவடி மற்றும் பக்தர்கள் நேர்ச்சை பொருட்களுடன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மன், சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்களது வீடுகளின் வாசல் முன் பொங்கலிட்டு வழிபட்டனர். இரவு பூச்சட்டி ஊர்வலம் முன் செல்ல சப்பர வீதி உலா நடந்தது. அதனைச் தொடர்ந்து அம்மன், சுவாமிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் வீரவநல்லூர் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வீரவநல்லூர் யாதவர் சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.