காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. வரதராஜ பெருமாள் தினமும் காலை, மாலை என, பல்வேறு விசேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 14ம் நாள் உற்சவமான தேரோட்டம் நடந்தது. தேரில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வந்தார்.எட்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், மாலை 6:00 குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9:00 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர்.நேற்று காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இரவு புண்ணியகோடி விமான உற்சவம் நடந்தது. இன்று (31ம் தேதி) பகல் 2:30 மணிக்கு த்வாதசாரதனம் உற்சவமும், இரவு 7:00 மணிக்கு வெட்டிவேர் சப்பரம் உற்சவமும் நடைபெறுகின்றன.