பதிவு செய்த நாள்
31
மே
2013
11:05
பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் பெருந்திருவிழா மே 14ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 21ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், 22ம் தேதி மேல்சந்தி மறித்தல், குடி அழைத்தல் புறப்பாடு, 24ம் தேதி அன்ன வாகனத்தில் அம்பாள் பரிவார தெய்வங்களு டன் திருவீதியுலா, 26ம் தேதி ரிஷப வாகனம், 27ம் தேதி யானை வாகனம், 28ம் தேதி கண்ணாடி ரதத்திலும் திருவீதி புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் 29ம் தேதி அம்பாளுக்கு திருமாங்கல்ய சீர்வரிசை வழங்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்பாள் பரிவார தெய்வங்களுடன் திருவீதி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா நேற்று காலை காலை 10.30 மணியளவில் நடந்தது. இதில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது, பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், டி.ஆர்.ஓ., சுப்ரமணியன், யூனியன்குழு தலைவர் மருதைராஜா, பி.ஆர்.ஓ., கண்ணதாசன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து இன்று மே 31ம் தேதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. நாளை 1ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் புறப்பாடு மற்றும் மூலஸ்தான வழிபாட்டுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் புகழேந்திரன், உதவி கமிஷனர் கோதண்டராமன், மதுரகாளியம்மன் கோயில் தக்கார் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.