பதிவு செய்த நாள்
31
மே
2013
11:05
தொட்டியம்: தொட்டியம் யூனியன் திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத திருவிழா முன்னிட்டு திருத்தேர் விழா நடந்தது. எம்பெருமாள் நரசிங்க உருவமெடுத்து அசுரன் இரணியனை வதைத்த பின்னர் கோபம் தீராத எம்பெருமானை பிரகலாதன் சாந்தமான உருவத்தில் காட்சியளிக்க வேண்டிக்கொண்டார். பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று பெருமாள் கோபம் தணிந்து திருநாராயணபுரத்தில், "வேதநாராயணன் என்ற பெயருடன் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி பள்ளிக்கொண்ட திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
இதனால் இத்தலம் சதுர்வேதி மங்கலம், வேதபுரி, ஆதிரங்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, தற்போது "திருநாராயணபுரம் என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது. நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்த திருத்தலமாகும். இதனால் இக்கோவில், "பிரகலாத சூத்திரம் என்ற பெயர் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோவில்களில் புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் கம்பத்தடியில் அமர்ந்துள்ள அனுமன் வேண்டுபவருக்கு வேண்டிய வரம் அளிப்பவராகவும் காட்சியளிக்கிறார்.
பிரகலாதனுக்கு அருள்புரிந்தவராகவும், அடியார் அரையருக்கு மோட்சம் அளித்தாலும், வேதனை தீர்க்கின்ற நாயகனாகவும் விளக்குகிறார். இத்திருத்தலத்தை வழிபடுவோருக்கு நல்ல கல்வி அமைதல், துன்பங்கள் நீங்குதல், தீ விபத்து மற்றும் தீக்காயம் குணமாதல், பெண்கள் திருமண தடை நீக்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் வேதநாயகி தாயாரை வழிபட்டு வருகின்றனர். இத்தகைய பெருமைவாய்ந்த இக்கோவிலின் வைகாசி மாத பெருந்திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. எம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து 28ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று 30ம் தேதி எம்பெருமாள் திருத்தேரினையொட்டி உபய நாச்சியாருடன் எழுந்தருளினார். அதன் பின்னர் காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா என பரவச கோஷத்துடன் எம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து, 11-28 மணிக்கு நிலையை வந்தடைந்தார். விழாவில், முசிறி, தொட்டியம், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும், நீர்மோர் பானகமும் வழங்கப்பட்டது.