பதிவு செய்த நாள்
05
ஜூன்
2013
11:06
அன்னூர்: சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களை தினமும் 10 நிமிடம் படித்தால், துணிவு பிறக்கும், என, அன்னூரில் நடந்த வரவேற்பு விழாவில், சுவாமி பக்தி காமானந்தா பேசினார். வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழாவை, ஓராண்டு முழுவதும் கொண்டாட ராமகிருஷ்ண மடம் மற்றும் வித்யாலயம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், விவேகானந்தரின் சிந்தனைகளை பரப்ப ரத யாத்திரை நடக்கிறது. ஏப்ரல் 13ல் கோவையில் துவங்கிய ரத யாத்திரை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், பயணம் செய்தபின், கோவை மாவட்டத்தில் நேற்று காலை நுழைந்தது. அன்னூர் கைகாட்டியில், விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில், துரைசாமி சித்தர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ஜ., மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் விவேகானந்தர் சிலைக்கு மாலையணிவித்தனர்; திரளான மக்கள் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பக்தி காமானந்தா பள்ளி வளாகத்தில், விவேகானந்தர் சிலையை பிரதிஷ்டை செய்தார். வித்யாலய செயலர் அபிராமானந்தர் பேசுகையில்,""சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும், இளைஞர்களுக்கு உற்சாகத்தையும், பெரியவர்களுக்கு ஆன்மிகத்தையும் வழங்குபவராக விவேகானந்தர் விளங்குகிறார். அவருடைய உபதேசங்களை பயன்படுத்தி நமது வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். விவேகானந்தரின் உபதேசங்களை தினமும் 10 நிமிடம் படிக்க வேண்டும். இதனால், மனதில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கை ஏற்படும், என்றார்.ரத யாத்திரை பொறுப்பாளர் சசி சிகானந்தா பேசுகையில்,""இந்த ரத யாத்திரை 282 நாட்கள், 32 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 10 ஆயிரத்து 600 கி.மீ., பயணம் செய்து, வரும் 2014, ஜனவரி, 8ல் சென்னை, மெரீனா அருகே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நிறைவு பெறுகிறது, என்றார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, பஜனை நடந்தது. புத்தக கண்காட்சியில் விவேகானந்தர் குறித்த புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.