பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி நட்சத்திர விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட வடபத்ரசாயி கோயிலில், பெரியாழ்வார் சன்னதி உள்ளது. பெரியாழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட விழா 18ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை பெரியாழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னம் பொறித்த கொடி, நான்கு ரதவீதிகளும் சுற்றிவர, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விஜய பாஸ்கரபட்டரால், தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியம், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான்பட்டர் சுதர்சனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் பெரியாழ்வார் சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, யானை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. விழாவின் 5ம் நாளன்று கருடசேவை நடக்கிறது.