பதிவு செய்த நாள்
12
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, 353 ஒரு கால பூஜை கோவில்களின் பூஜை செலவிற்காக, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 35.30 கோடி ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக செலுத்த, முடிவு செய்யப் பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,195 கோவில்கள் உள்ளன. இவற்றில், 353 கோவில்கள், ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் கோவில்களாகும். ஒவ்வொரு ஒரு கால பூஜை கோவிலுக்கும், அறநிலைய துறை சார்பில், 22,500 ரூபாயும், நன்கொடையாளர்கள் மூலம் 2,500 ரூபாயும் சேர்த்து, 25 ஆயிரம் ரூபாய், வங்கிகளில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகை பூஜைக்கு தேவையான எண்ணெய், பூ போன்ற பொருட்களை வாங்க செலவிடப்பட்டு வருகிறது.ஆனால், 25 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகைக்கு ஆண்டுக்கு, 2,000 ரூபாய் தான் வட்டி கிடைக்கிறது. இது, விளக்கு ஏற்றும் செலவிற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மற்ற பூஜை செலவுகளுக்கு கோவில் நிர்வாகம் திணற வேண்டி உள்ளது.
தடைபடும் பூஜைகள் :மேலும், மாதாந்திர சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் நடத்த பணம் இருப்பதில்லை. இதனால், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விழாவிற்கும் நன்கொடையாளர்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நன்கொடையாளர்கள் கிடைக்காத நேரங்களில், பூஜைகள் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலையும்
உருவாகிறது.ஒரு கால பூஜைக்கான வங்கி வைப்பு தொகையை அதிகரிக்க, அறநிலைய துறை முடிவெடுத்து, அதற்கான பரிந்துரையை, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில், அரசுக்கு அனுப்பி வைத்தது. பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, இந்த மாதத்தில் இருந்து, ஒரு கால பூஜைக்கான வைப்பு தொகையை, ஒரு லட்சம் ரூபாயாக, தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கால பூஜை கோவில்களுக்கு பயன்படும் வகையில், அதிகரித்து உத்தரவிட்டது.
கூடுதல் வருவாய்:இதில், 90 ஆயிரம் ரூபாய் அரசின் பங்களிப்பாகவும், 10 ஆயிரம் ரூபாய் நன்கொடையாளர்கள் பங்களிப்பாகவும் இருக்கும்.வைப்பு தொகை அதிகரிப்பால், ஒவ்வொரு கோவிலுக்கும், ஆண்டுக்கு, 8,000 ரூபாய் வரை பூஜை செலவுகளுக்காக கிடைக்கும். இதனால், பூஜைகள் தடையில்லாமல் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, ஒரு கால பூஜை நடைபெறும் கோவிலின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""அரசு, வைப்பு தொகையை உயர்த்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், பூஜை செலவினங்கள் அதிகரிப்பால், இந்த வருவாயும் போதுமானதாக இருக்காது. நன்கொடையாளர்கள் மூலம் செலவுகளை சரிகட்ட வேண்டிய அவசியம் தொடர்கிறது, என்றார்.
மேலும், ""ஒரு கால பூஜை கோவில்களில், அர்ச்சகருக்கு, மாதம் தொகுப்பு ஊதியமாக, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த கோவில்களுக்கு பக்தர்கள் அதிகமாக வருவதில்லை என்பதால், கூடுதல் வருமானத்திற்கும் வழியில்லை. எனவே, அர்ச்சர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.