பதிவு செய்த நாள்
13
ஜூன்
2013
10:06
கனடாவின் வான்கோவர் நகர வீதிகளில் ஆகஸ்ட் 9ம் தேதியன்று துர்காதேவி கோயில் தேர் பவனி நடக்கிறது. பர்ன்பை பகுதியில் தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வரும் அருள்மிகு துர்காதேவி இந்து சமூக ஆலயத்தின் ஆண்டு தேர்த் திருவிழா, ஆடிப்பூர தினமான ஆகஸ்ட் 9ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்பகுதி இந்துக்களிடையே மிகவும் பிரபலமான இந்த தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பர்ன்பை நகர கவுன்சில் இவ்விழாவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தேர்த் திருவிழா குறித்து அமெரிக்காவின் நிவேதாவில் இருந்து இந்து சமய தலைவர் ராஜன் ஜெத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : ஆலய நிர்வாகிகள் மற்றும் வான்கோவர் இந்து சமூகம் இணைந்து இத்தகைய தேர்த் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒன்றாகும்; இது இந்து மதத்தின் பலத்தை நிரூபிப்பதாக உள்ளது; தற்காலத்தில் பல்வேறு கவனச்சிதறல்களுக்கு ஆட்பட்டு இருக்கும் வருங்கால தலைமுறையினரிடம் இந்து மதத்தின் ஆன்மிக சிந்தனைகள், கொள்கைகள் மற்றும் பண்பாட்டை கொண்டு சேர்ப்பதற்கு இது போன்ற விழாக்கள் முக்கியமானதாகும்; பொருள்களை தேடி ஓடுவதற்கு பதில் சுயஆய்வு, பரிசோதனை, தன்னை உணர்வது மற்றும் தேடல்களில் இருந்த விடுபடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்; இதுவே இந்து மதத்தின் லட்சியம் ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்து சமூகத்தின் அடையாளமாக செயல்படும் இவ்வாலயத்தில் வழிபாடு தவிர திருமணங்கள், ஆத்மசாந்தி பூஜைகள், குழந்தைகளுக்கு திட உணவுமுறை துவங்குதல், கல்வி, காதணி விழா உள்ளிட்ட வைபவங்களும் நடத்தப்படுகிறது. இவ்வாலயத்தின் முக்கிய தெய்வமாக துர்கை அம்மன் உள்ளார். இவ்வாலய தலைவராக கே.குமாரசாமியும், துணைத் தலைவராக எம்.மருதமூர்த்தியும், செயலாளராக டி.முருகதாசனும், பொருளாளராக கே.கோகிலதாசும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.ராஜன் ஜெத் தனது அறிக்கையில் பண்டைய இந்து மத வேதஆகம முறையிலான கதா உபனிஷத்தை மேற்கோள் காட்டி உள்ளார். கதாஉபனிஷத்தில் தேர் பற்றிய கருத்தின்படி மனித ஆத்மாவை தெய்வமாகவும், உடம்பை தேராகவும், அறிவை தேரோட்டியாகவும் கொண்டு வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். - வான்கோவரில் இருந்து ராஜன் ஜெத்.