விநாயகர் முருகன் இருவரிடையே நடந்த போட்டி கனிக்காகவே(பழத்திற்காக) என்று பழநி கோயில் தல வரலாறு கூறுகிறது. ஆனால், சிவமகாபுராணம் இதை வேறுவிதமாக, கல்யாணப்போட்டியாக கூறுகிறது. சிவபார்வதி, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய தீர்மானித்தபோது, உலகை ஏழுமுறை வலம் வந்து வெல்பவருக்கே முதலில் திருமணம் என்று முடிவு செய்தனர். உடனே, மயில் மீதேறி முருகன் புறப்பட்டார். ஆனால், விநாயகரோ அம்மையப்பரே உலகம் என்று சொல்லி ஏழுமுறை வலம் வந்தார். விநாயகர் போட்டியில் வெற்றி பெற்றதாக சிவன் முடிவு செய்தார். விநாயகருக்கு விஸ்வரூபனின் மகள்களான சித்தி, புத்தியை மணம் செய்து வைத்தார். தாமதமாக வந்த முருகன், இதைக் கண்டு கோபம் கொண்டார். கிரவுஞ்சகிரி என்னும் மலையில் பிரம்மச்சாரியாக அமர்ந்தார். அதனால் அவருக்கு குமாரசுவாமி குமார பிரம்மச்சாரி என்ற பெயர் ஏற்பட்டது.