அகத்தீஸ்வரமுடையார் கோவிலில் கல்வெட்டுகள் ஆய்வு துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2013 09:06
செஞ்சி: சென்னையை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் கள்ளப்புலியூர் அகத்தீஸ்வரமுடையார் கோவில் கல் வெட்டுக்களை ஆய்வுக்காக படி எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கள்ளப்புலியூரில் பழமையான அகத்தீஸ்வரமுடைய நாயனார் கோவில் உள்ளது. பாழடைந்துள்ள இக்கோவிலை திருப்பணிகள் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கோவிலின் முழு தகவல்களை அறிய இங்குள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, அறங்காவலர் வெள்ளை கொடுத்த தகவலின் பேரில் சென்னை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் ஜெயராமன், கல்வெட்டு சிற்றெழுத்தர்கள் ஜோதி, துரை சில நாட்களாக இங்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களை படி எடுத்து ஆய்வு செய்தனர். கல்வெட்டு ஆய்வாளர் ஜெயராமன் கூறியதாவது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் (பொ) வசந்தி வழிகாட்டுதலில் இங்குள்ள கோவிலில் உள்ள கல்வெட்டுக்களை படி எடுத்துள்ளோம். இங்குள்ள கல்வெட்டுக்கள் 14ம் நூற்றாண்டை சேர்ந்தவை. ஜெயங்கொண்ட உத்தம சோழ வளநாட்டு களப்பலியூர் என ஊரின் பெயரும், இங்குள்ள சிவனின் பெயர் அகத்தீஸ்வர முடைய நாயனார் என்றும் உள்ளது. 14ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த ராஜநாராயண சம்புவராயர் கோவிலுக்கு கொடுத்த கொடைகள் குறித்தும், விஜயநகர மன்னன் கம்பண உடையார் குறித்தும் கல்வெட்டில் தகவல்கள் உள்ளன. கல்வெட்டுக்கள் அனைத்தும் படி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் கோவில் குறித்த தகவல்கள் தெரிய வரும். இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் ஜெயராமன் கூறினார்.